Wednesday 22 August 2012

தூத்துக்குடியில் அரசு பொருட்காட்சி செப்.6ல் துவக்கம் : மாவட்ட வெள்ளி விழாவை முன்னிட்டு நட்க்கிறது


தூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழாவை முன்னிட்டு அர‌சு சார்பில் பொருட்காட்சி செப்டம்பர் 6ம் தேதி துவங்கி 45 நாட்கள் நடைபெறுகிறது.

தூத்துக்குடியில் ஆண்டு தோறும் பனிமயமாதா கோவில் திருவிழாவையொட்டி நகராட்சி சார்பில் தருவை மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடந்து வந்தது. கடந்த 1990ம் ஆண்டு நகராட்சி சேர்மனாக இருந்த என்.பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைப்பத்ற்காக நகராட்சி சார்பில் அரசு பொருட்காட்சி நடத்தி அதில், நுழைவு கட்டணமாக வசூலிக்கப்பட்ட 6லட்சத்து 60ஆயிரம் ரூபாயை அப்போதைய தூத்துக்குடி ஆட்சிய‌ராக பணி புரிந்து வந்த சிவகாமியிடம் ஒப்படைத்தார். அந்த பணம் மூலம் தான் தருவை மைதானத்தில் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கம் உருவாக்கப்பட்டது.

அதன் பின்பு 22 ஆண்டுகளாக நகராட்சி சார்பிலோ, மாவட்ட நிர்வாகம் சார்பிலோ பொருட்காட்சி நடத்தப்படவில்லை. தற்போது தூத்துக்குடி மாவட்டம் உருவாகி 25ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி வெள்ளிவிழா கொண்டாட்டமாக தற்போதைய ஆட்சியர் ஆஷிஷ்குமார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து தூத்துக்குடி பீச் ரோட்டில் முத்துநகர் கடற்கரையை உருவாக்கியுள்ளார்.

இந்த கடற்கரையில் வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமை தூத்துக்குடி மக்களின் பொழுது போக்கு அம்சமாக பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து நடந்து வருகிறது. தற்போது, செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அரசு பொருட்காட்சி 45 நாட்கள் நடத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. செப்டம்பர் 6ம் தேதி துவங்கும் அரசு பொருட்காட்சி முத்துநகர் கடற்கரையில் நடைபெறுகிறது.

பொருட்காட்சியில் 50க்கும் மேற்பட்ட கடைகள், மேஜிக் ஷோ, செல்லப்பிராணிகளின் கண்காட்சி, ராட்டிணம், ரயில்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏராளமாக இடம்பெற உள்ளன. மேலும், தினசரி இரவு 7மணி முதல் 10மணிவரை சின்ன‌த்திரை,வண்ணத்திரை நடிகர், நடிகைகள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகள், ஆடல் பாடல்கள், நாடகங்கள் இடம்பெற உள்ளன. 

வெள்ளி விழாவை முன்னிட்டு அர‌சு சார்பில் பொருட்காட்சி செப்டம்பர் 6ம் தேதி துவங்கி 45 நாட்கள் நடைபெற உள்ளதால் தூத்துக்குடி மாவட்ட பொதுமக்களிடையே எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது.

0 comments:

Post a Comment

 
-