Monday, 16 July 2012

காவல் துறை சார்பில் வெள்ளி விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சிகள்



நெல்லை மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் பிரிந்து 25 ஆண்டுகள் ஆகிறது. 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி மாவட்ட நிர்வாகம் வெள்ளி விழா கொண்டாடுவது என்று முடிவு செய்தது. இந்த வெள்ளி விழா கொண்டாட்ட தொடக்க விழா மார்ச் 25-ந் தேதி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக கடற்கரையில் நடந்தது.

இதைதொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது. கலை, கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் கோவில்பட்டியில் 1½  மாதமாக கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதைதொடர்ந்து வெள்ளி விழா ஆண்டு சிறப்புகளை கொண்டாடும் வகையில் வெள்ளி விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சிகள் தொடக்க விழா தூத்துக்குடி வடக்கு பீச்ரோட்டில் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள கடற்கரை பூங்காவில் கடந்த 1-ந் தேதி தொடங்கியது.

இந்நிலையில் நேற்று மாலை தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பில் வெள்ளி விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அமிர்தஜோதி தலைமை தாங்கினார். மாவட்ட எஸ்.பி. ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி ரூரல் துணை எஸ்.பி. நாராயணன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் கலந்து கொண்டார்.


விழாவில் மாவட்ட எஸ்.பி. ராஜேந்திரன் பேசும் போது, தூத்துக்குடியில் உருவாக்கப்பட்ட இந்த புதிய பீச் உருவாக 2 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபட்டனர். போலீசாரின் பெரும் முயற்சியால் இந்த பீச் உருவாக்கப்பட்டு உள்ளது. போலீசாரும் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஓய்வு நேரத்தில் இதை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு மக்களுக்காக இந்த பீச்சை அர்ப்பணித்து இருக்கிறோம்.



தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில் 500 ரவுடிகளை நேரடியாக அழைத்து விசாரணை செய்து அவர்களை ரவுடி பட்டியலில் இருந்து நீக்கி உள்ளேன். இது அவர்களுக்கு சமுதாயத்தில் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு ஆகும். மேலும் தூத்துக்குடி, கோவில்பட்டியில் போக்குவரத்து சரி செய்யப்பட்டுள்ளது. 


மாவட்டத்தில் குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இனி குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் சிறை தண்டனை விதிக்கப்படும். ஹெல்மெட் அணியாததால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்கப்படும். மேலும் தூத்துக்குடியில் ஸ்பாட் அபராதம் திட்டம் இன்று (அதாவது நேற்று) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.  இவ்வாறு எஸ்.பி. பேசினார்.


தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியில் நகர துணை எஸ்.பி. மகேஷ், திருச்செந்தூர் எஸ்.பி. ஞானசேகர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் குமார், தாசில்தார் கலியூகவரதன், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

0 comments:

Post a Comment

 
-