வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு மண்டபம் உள்ளேயும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்தும் தூய்மையாக உள்ளன. சுவர்களில் வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றைச் சித்திரமாக தீட்டி வைத்திருக்கின்றனர். ஒவ்வொரு சித்திரமும் ஒரு கதை சொல்லும் அருமையான சித்திரங்கள். அங்கு சுற்றுப் பயணிகளுக்குத் தகவல் வழங்குவதற்காக ஒருவரை நியமித்திருக்கின்றார்கள்.
பாஞ்சாலங்குறிச்சியைத் தனது கோட்டைக்கான இடமாக கட்டபொம்மன் வம்சத்தினர் தேர்ந்தெடுத்தமைக்கு ஒரு கதை கூறுகின்றனர். அவர்கள் பார்த்த ஒரு காட்சி அவர்களை இவ்விடத்தை தேர்ந்தெடுக்க வைத்துள்ளது.
ஒரு நாய் மிக வேகமாக ஒரு முயலை விரட்டிக் கொண்டு வருகின்றது. பாஞ்சாலங்குறிச்சி மண்ணை மிதித்ததும் அந்த முயல் திடீரென எதிர்த்துக் கொண்டு நாயை விரட்ட ஆரம்பித்திருக்கின்றது. இந்த மண்ணை மிதித்ததுமே இந்த முயலுக்கே வீரம் வந்திருக்கின்றதென்றால் இந்த இடத்தில் நாம் நமது கோட்டையை அமைத்தால் அதற்கு அர்த்தம் இருக்கும். நாம் வீரமாக ஆட்சி புரியலாம் என நினைத்து இந்த இடத்தில் கோட்டயை அமைத்திருக்கின்றனர் கட்டபொம்மன் வம்சத்தினர்.
அவரது பாட்டனார் ஆட்சிப் பொறுப்பை வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அவரது 30வது வயதில் வழங்குகின்றார். தனது பாட்டனார் பாஞ்சாலன் ஞாபகமாக இந்தப் பகுதிக்குப் பாஞ்சாலங்குறிச்சி என்று பெயரும் வழங்குகின்றார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் தனது ஆட்சியின் போது 6 ஆண்டுகள் ஆங்கிலேயர்களுக்கு வரி கட்டாமலேயே இருந்திருக்கின்றார். இதனை அறிந்த ஆங்கிலேய அதிகாரி இவரிடம் வரி கட்டும் படி கோரி செய்தி அனுப்புகின்றார். வரி கட்ட முடியாது என்று தெரிவித்து கட்டபொம்மன் மறுக்கின்றார். வரி தர முடியாது என்று கூறிவிட்டாலும் இதனால் ஏதும் விபரீதம் விளையுமோ என்று அவருக்கு மனதில் கலக்கம் இருக்கின்றது. வரி தர முடியாது என்று சொல்லிவிட்டோம். இதனால் ஏதும் கேடு ஏற்படுமோ என எண்ணம் தோன்ற தனது குலதெய்வமான ஜக்கம்மாவை இவரும் இவரது மனைவியும் வழிபடுகின்றாகள்.
ஜாக்சன் துரை என்பவர் 10.9.1790ல் தனது ஆட்களை அனுப்பி கட்டபொம்மனை அழைத்து வந்து கட்ட வேண்டிய பாக்கி வரியை கட்டாததன் காரணைத்தை அறிய விசாரனை நடத்துகின்றார்
இந்த விசாரணை நடைபெறும் போது கட்டபொம்மன் தந்திரமாக தனது வாளால் அவரைத் தாக்கி விட்டு தப்பித்து ஓடி விடுகின்றார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் தப்பித்துப் ஓடினாலும் இவரது கணக்குப்பிள்ளை தாணாபதிப்பிள்ளை பிடிபட்டு விடுகின்றார். இவரை பிடித்து ஆங்கில அரசாங்கம் கைது செய்து திருச்சி சிறையில் அடைக்கின்றார்கள். கணக்குப்பிள்ளை பின்னர் விடுதலை செய்யப்படுகின்றார்.
கட்டபொம்மனும் அவரது மனைவியும் சில வீரர்களுடன் ஒட்டப்பிடாரத்துக்கு அருகில் சாலிகுளம் என்னும் இடத்தில் தங்கியிருக்கின்றார்கள். அப்போது அனைத்து பொறுப்பும் மந்திரி தானாபதி பிள்ளைக்குப் போய் சேர்கின்றது
எட்டயபுரம் ஜமீனோடு ஒப்பிடும் போது கட்டபொம்மனின் அரசாங்கம் சிறியதே. ஆக ஆங்கிலேயர்கள் எட்டயபுர ஜமீன் ஆதரவோடு கட்டபொம்மன் தொடர்பான தகவல்களைப் பெற முயற்சிக்கின்றனர்.
கட்டபொம்மன் சிறந்த முருக பக்தர். திருச்செந்தூரில் திருவிழா நடைபெறும் போது வீரர்களுடன் கோயிலுக்குச் சென்று விடுவாராம். அந்த நேரத்தில் கோட்டையைத் தாக்கினால் கோட்டையைக் கைபற்றிவிடலாம் என்று ஆங்கில அரசு திட்டமிடுகின்றனர். 5.9.1799 அன்று பானர்மேன் என்ற ஒரு ஆங்கிலேய அதிகாரி தன் வீரர்களுடன் கோட்டைக்கு வருகின்றார். அந்த சமயம் கட்டபொம்மன் கோட்டையில் இல்லாத காரணத்தால் இந்தக் கோட்டையை இடித்து உடைத்து தரை மட்டமாக்கி விட்டுச் சென்று விடுகின்றனர்.
இப்படி தரை மட்டமாக்கிய பின்னர், மந்திரி தாணாபதிப்பிள்ளையின் ஆலோசானையைக் கேட்டு தம்பி ஊமைத்துரையையும் அழைத்துக் கொண்டு புதுக்கோட்டைக்குச் சென்று விடுகின்றார் கட்டபொம்மன்.
9.9.1799ல் கட்டபொம்மன் தனது இடத்தை விட்டு வேறு இடம் சென்று விட்டார் என்ற தகவல் ஆங்கிலேய அதிகாரிகளுக்குச் செல்கின்றது. கட்டபொம்மன் இல்லாததால் எல்லாவறறையும் இடித்து உடைக்க உத்தரவிடுகின்றார்.
கட்டபொம்மன் புதுக்கோட்டையில் தங்கியிருக்கும் விஷயம் அறிந்த புதுக்கோட்டை மன்னர் விஜயநகர தொண்டைமான் என்பவர் இந்தத் தகவலை ஆங்கிலேயர்களுக்குத் தெரிவிக்கின்றார். தகவல் கிடைத்த ஆங்கிலேயர்கள் அங்கு சென்று கட்டபொம்மனை புதுக்கோட்டையில் கைது செய்து விடுகின்றார்கள். கைது செய்து அங்கிருந்து கட்டபொம்மனைக் கயத்தாறு கொண்டு செல்கின்றார்கள். அங்கு அவரை விசாரனை செய்கின்றார்கள். விசாரணையின் அடிப்படையில் 16.10.1799 அன்று அவரை புளியமரத்தில் பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிட உத்தரவிடுகின்றார்கள்.
கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட பின்னர் ஆங்கிலேய அரசு கட்டபொம்மனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட பொது மக்களையும் சிறையில் அடைக்கின்றனர். சிறையில் அடைக்கப்பட்டவர்களில் கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையும் ஒருவர். இவர் சிறையிலிருந்து தப்பித்து பாஞ்சாலங்குறிச்சி வருகின்றார்.
திரும்பி வந்ததும் அங்குள்ள மக்களை ஒன்று திரட்டி மீண்டும் முதலில் கோட்டை இருந்த இடத்திலேயே ஒரு கோட்டையையும் கட்டி விடுகின்றார் ஊமைத்துரை. இந்த செய்தி ஆங்கிலேயர்களுக்கு எட்டுகின்றது. மீண்டும் எப்படி ஒரு கோட்டை கட்டப்பட்டிருக்கின்றது என்ற செய்தி கேட்டு நேரில் வந்து பார்க்க வருகின்றனர். மீண்டும் ஒரு போர் ஆரம்பிக்கின்றது. ஊமைத்துரைக்குத் துணையாக இருந்து படைக்கு தலைவராக இருந்து போராடுகின்றார் வெள்ளயத்தேவன். ஊமைத்துரை கட்டிய கோட்டையை பீரங்கிகளை வைத்து ஆங்கிலேயர்கள் உடைத்து தரைமட்டமாக்கி விடுகின்றனர்.
0 comments:
Post a Comment