Showing posts with label Song. Show all posts
Showing posts with label Song. Show all posts

Sunday, 11 March 2012

தூத்துக்குடி மாவட்டவெள்ளி விழாபாடல்-2

 இயற்றியவர்
V.R. Raguraman
Synchro Design P. Limited.
பல்லவி
--------------

மண்ணில் பெருமை கொள்வோம்! நாம் பிறந்த மண்ணில் பெருமை கொள்வோம்! 
இயற்கை வளத்தில் நிறைந்தவர் நாமென்றே பெருமை கொள்வோம் நாமே! 
சரித்திரம், கலைகள், வளர்த்தவர் நாமென்றே பெருமை கொள்வோம் நாமே!
சுதந்திர தாகத்தை விதைத்தவர் நாமென்றே பெருமை கொள்வோம் நாமே!
தொழில்முனைவோரில் முன்னணி நாமென்றே பெருமை கொள்வோம் நாமே! 

சரணம் - 1
-----------------
மொழியையும் கலையையும் காத்த சமணர் குகைகள் இங்கிருக்கு!
வழியாய் துணையாய் மீனவர் காக்கும் மாதா கோவிலும் இங்கிருக்கு!
கடலலை பணிவுடன் முருகனை வணங்கும் திருச்செந்தூரும் இங்கிருக்கு!
நபிகள் நாயகத்தை துதிக்கும் காயலில் பள்ளிவாசல்கள் பல இங்கிருக்கு! (மண்ணில்)

சரணம் - 2
-----------------
கப்பங்கட்ட மறுத்த கட்டபொம்மனைத் தந்த பெருமையும் எங்களுக்கே! 
கப்பலோட்டிய தமிழன் சிதம்பரனாரைத் தந்த பெருமையும் எங்களுக்கே!
வெண்முண்டாசுக் கவிஞன் பாரதியாரைத் தந்த பெருமையும் எங்களுக்கே!
மும்மூர்த்தியிலொருவர் முத்துசாமி தீட்சிதரை தந்த பெருமையும் எங்களுக்கே!  (மண்ணில்)


சரணம் - 3
-----------------
இயற்கை அணிவித்த ஆபரண முத்துக்கள் விளைவதும் எம்மண்ணிலே!
நெருப்புக் குச்சியை பெட்டிப் பாம்பென அடக்கியாள்வதும் எம்மண்ணிலே!
உடுத்தும் ஆடைக்கு ஊடும் பாவுமாய் நூல்ச்சரத்தை நூற்பதும் எம்மண்ணிலே!
பரந்த கடலிலே வணிகம் செழித்திடும் கப்பல் துறைமுகம் எம்மண்ணிலே! (மண்ணில்)

சரணம் - 4
-----------------

அள்ளக்குறையாத வலைகள் தாங்காத மீன்வளமுள்ள மண்ணடா!  
வெள்ளை மனதென கெடுதல் நினையாத உப்பு விளைகிற மண்ணடா!
செல்லகுழந்தையாய் தவழ்ந்து திரிந்திடும் பரணி பாய்கிற மண்ணடா!
இந்தியா ஒளிர்ந்திட அனலாய் தகித்து சக்தியைத் தருகிற மண்ணடா!
நம் தூத்துக்குடிமண்ணடா!

மண்ணில் பெருமை கொள்வோம்! நாம் பிறந்த மண்ணில் பெருமை கொள்வோம்! 




Friday, 9 March 2012

தூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழா பாடல்

தூத்துக்குடி மாவட்டவெள்ளி விழாபாடல்
இயற்றியவர்
சு.அங்கப்பன்
Plams (http://www.palmsindia.org/)


அள்ளிஅள்ளிபூத்தொடுப்போம் - நாம்
துள்ளி வந்து பண் அமைப்போம்
தூத்துக்குடி மாவட்டத்தின் - நல்
வெள்ளி விழாபா தொடுப்போம்!

பொதிகைமலை உச்சியிலே புறப்பட்டு பொருநைசேரும்
வங்கக் கடலலைகள் வந்துமுத்தமிடும் சிங்கக்குணமாந்தர்
சிறப்புடனே வாழும் பொங்கும் பெருமையுடன்
தூத்துக்குடிமாவட்டம் வாழ்கவே!
(அள்ளிஅள்ளி)

உப்புவிளைவதனால் உணர்வுகள் மேலோங்க
உரஆலைகள் இருப்பதனால்,வேளாண்விளைவும் செழித்திட
தீப்பெட்டித் தொழிலதுதினந்தோறும் வளர்ந்துவர
புதியதுறைமுகப் பொலிவால் மேன்மையுற
நவீனக் கோலம் கொண்ட தூத்துக்குடிவாழ்கவே!
(அள்ளிஅள்ளி)

கொற்கைகாயல் முருகன் கோவில் உள்ளசெந்தூர்
உவரிமணப்பாடு உடன்குடி என விரிந்து
சாத்தான் குளம் தனைச் சார்ந்த திருவைகுண்டம்
சுதேசிக்குரல் ஒங்கி உயர்ந்த ஓட்டப்பிடாரம்
எட்டாத உயரத்தில் இருந்ததமிழ் கவிதையை
கவிதையாவருக்கும் பொதுவென்றஎட்டயபுரம்
உட்கொண்ட தூத்துக்குடிமாவட்டம்
(அள்ளிஅள்ளி)


அன்புருகவந்தோரைஅரவணைக்கும்
செண்பகத்தாய் சேர்ந்தகோவில்பட்டி
பனிமயமாதாபவனிவரும் பழையதுறைமுகம்
கொண்டதோர்மாவட்டமாம்
தூத்துக்குடியைகும்பிட்டுவாழ்த்துவோம்!
(அள்ளிஅள்ளி)

மீன் வளம் நிறைந்தும்,மின் வளம் பெருகியும்
குறிஞ்சி முல்லைமருதம் நெய்தல்
எனஐவகைநிலமும் ஒருசேரஅமைந்த
தமிழக அற்புத பூமியாம்
தூத்துக்குடிமாவட்டம் அன்னைபாரதத்தில்
இன்னும் சிறந்திடவே
அனைவரும் வாழ்த்துவோம்
(அள்ளிஅள்ளி)

 
-