Tuesday, 27 March 2012

தூத்துக்குடி மாவட்டம் உருவாகி வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டம்


தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சிக்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்
அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பேச்சு


தூத்துக்குடி, மார்ச்.26-

"தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சிக்கு ஒன்றிணைந்து அனைவரும் செயல்பட வேண்டும்" என்று அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கூறினார்.

வெள்ளி விழா ஆண்டு


1986-ம் ஆண்டில் நெல்லை மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உதயமாகியது. தூத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதையொட்டி, நடப்பாண்டை வெள்ளி விழா ஆண்டாக கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டத்தின் தொடக்கமாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக கடற்கரையில் நேற்று மாலையில் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாநகர மேயர் சசிகலா புஷ்பா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருண்மணி வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கலந்து கொண்டார். அவர் பேசும் போது கூறியதாவது:-

வளர்ச்சி பணிகள்

தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி பணிகளுக்கு என்ன கேட்டாலும் செய்து தருவதற்கு முதல்-அமைச்சர் தயாராக இருக்கிறார். தமிழகம் சிறந்து விளங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆட்சி செய்து வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டம் வளர்ச்சியில் முதன்மை மாவட்டமாக வேண்டும். அதற்கு மாவட்ட கலெக்டர் ஒரு குழு அமைக்க வேண்டும். அந்த குழுவில் அனைவரும் இடம்பெற்று ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்த வெள்ளி விழா கொண்டாடத்தில் முதல்-அமைச்சரும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்வேன். தூத்துக்குடி மாவட்டம் மீது முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தனி பற்று உண்டு.

இவ்வாறு அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பேசினார்.

கலெக்டர்

விழாவில் கலெக்டர் ஆஷிஷ்குமார் பேசியதாவது:-


விடுதலைக்காக போராடிய வ.உ.சிதம்பரனார், பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோர் வாழ்ந்த பூமிதான் தூத்துக்குடி மாவட்டம் ஆகும். உப்பு தொழில், தீப்பெட்டி தொழில் மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் இது. ஏராளமான ஆன்மிக கோவில்களும் உள்ளன.

இந்த வெள்ளி விழா கொண்டாட்டம் இன்று (அதாவது நேற்று) தொடங்கி 7 மாதங்கள் நடைபெறும். வெள்ளி விழாவை சிறப்பாக கொண்டாட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும். விளையாட்டுத்துறை மேம்படுத்தப்படும்.

புதிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். சிறந்த விளையாட்டு வீரர்கள் உருவாக்கப்படுவார்கள். நாட்டுப்புற கலைகள் ஊக்குவிக்கப்படும். பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படும்.

இவ்வாறு கலெக்டர் ஆஷிஷ்குமார் பேசினார்.

சி.டி. வெளியீடு


பின்னர் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வெள்ளி விழாவையொட்டி நேற்று காலை நடந்த மினி மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். வெள்ளி விழா சின்னத்தையும், தூத்துக்குடி மாவட்டத்தின் சிறப்பு, பண்பாடு, பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதத்தில் பிரபல திரைப்பட பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் பாடியுள்ள சி.டி.யையும் வெளியிட்டார். சி.டி.யை மேயர் சசிகலா புஷ்பா பெற்றுக் கொண்டார்.

விழாவில் போலீஸ் இணை சூப்பிரண்டு சோனல் சந்திரா, மாவட்ட வருவாய் அலுவலர் அமிர்த ஜோதி, மகளிர் திட்ட அலுவலர் பெல்லா, உதவி கலெக்டர் லதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ருக்மணி, தாசில்தார் கலியுகவரதன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பி.கே.ரவி, ஓட்டப்பிடாரம் ïனியன் தலைவர் காந்தி என்ற காமாட்சி, ஆழ்வார்திருநகரி ïனியன் தலைவர் விஜயகுமார், காயல்பட்டினம் நகரசபை தலைவி அபிதா, தூத்துக்குடி நகர அ.தி.மு.க. செயலாளர் ஏசாதுரை, தொழில் அதிபர்கள் ஏ.வி.எம்.மணி, ஏ.பி.சி.வீ.சொக்கலிங்கம், ராஜா சங்கரலிங்கம், சாமுவேல், ஸ்டெர்லைட் நிறுவன பொது மேலாளர் தனவேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொன்மாணிக்கம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கலைநிகழ்ச்சிகள்


தென்னக கலை பண்பாட்டுத்துறை சார்பில் ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், கல்லூரி, பள்ளிக்கூடங்களின் மாணவ-மாணவிகள் நடத்திய நடன நிகழ்ச்சியும் நடந்தது.

வ.உ.சி. கடற்கரை மைதானத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சியும் அமைக்கப்பட்டு இருந்தது.

0 comments:

Post a Comment

 
-