Tuesday, 24 July 2012

தூத்துக்குடி கடற்கரையில் நடந்த உணவுத் திருவிழா



தூத்துக்குடி மாவட்டம் உருவாகி 25 ஆண்டுகள் நிறைவு பெற்று உள்ளதால் வெள்ளி விழா கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. இதையொட்டி நேற்று மாலையில் கடற்கரையில் நடந்த உணவுத் திரு விழாவில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

நெல்லை மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, வெள்ளி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை தோறும் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில், சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நேற்று மாலையில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உணவு தயாரிப்பு நிறுவனங்கள் கலந்து கொண்டு, விதவிதமான உணவு வகைகளை தயாரித்து விற்பனை செய்தன. விழாவையொட்டி பிரைடு ரைஸ், சாண்ட்விச் உள்ளிட்ட சிறப்பு உணவுகள் தயாரிப்பு போட்டியும் நடத்தப்பட்டது. இதற்காக பெயர் முன்பதிவு செய்தவர்கள் நேற்று மாலையில் நடந்த போட்டிகளில் பங்கேற்று, உணவுகளை தயாரித்தனர். 




உணவுத் திருவிழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் தலைமை தாங்கி, சிறந்த முறையில் உணவு தயாரித்தவர்களை தேர்வு செய்தார். உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் வரவேற்றுப் பேசினார். மைதானத்தை சிறப்பாக வடிவமைத்த ஆக்கிடெக் ஜீன், உணவு நிறுவனங்களை ஒருங்கிணைத்த மாநகர உணவு அலுவலர்கள் சந்திரமோகன், ராமகிருஷ்ணன், தூத்துக்குடி ஒன்றிய அலுவலர் ஆகியோருக்கு ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.



விழாவில் ஆர்வமுடன் கலந்து கொண்ட பொதுமக்களிடம் உணவு தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. அந்த கேள்விகளுக்கான சரியான பதிலை எழுதி கொடுக்கும் பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உணவுத் திருவிழாவையொட்டி முத்துநகர் கடற்கரை விழாக்கோலத்தில் இருந்தது. 

0 comments:

Post a Comment

 
-