Friday, 23 March 2012

தூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழா கொண்டாட்டம் : நாளை துறைமுக கடற்கரையில் துவக்க விழா



தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழா கொண்டாட்ட துவக்க நிகழ்ச்சி நாளை (25ம் தேதி) வஉசி., துறைமுக கடற்கரையில் நடைபெறவுள்ளதாக கலெக்டர் ஆஷிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; தூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழா கொண்டாட்ட துவக்க விழா 25ம் தேதி நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனமும், மாவட்ட தடகள சங்கமும் இணைந்து நடத்தும் மினி மராத்தான் போட்டி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து தொடங்குகிறது. இப்போட்டியில் ஆண்கள், பெண்கள், முதியோர், சிறுவர், சிறுமியர் அனைவரும் பங்கு பெறும் வகையில் 8 விதமான போட்டிகள் நடக்கிறது. இதில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

வெள்ளி விழா கொண்டாட்டத்தின் துவக்க விழா நிகழ்ச்சி அன்று மாலை 4.30 மணிக்கு தூத்துக்குடி வஉசி.,துறைமுக கடற்கரையில் நடக்கிறது.
தூத்துக்குடி இசைக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் நாதஸ்வர நிகழ்ச்சியுடன் தொடங்கும் இவ்விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் தலைமை வகிக்கிறார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லபாண்டியன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசுகிறார்.

 விழாவில் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு சங்கங்கள், நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தின் சிறப்பினையும், பண்பாட்டினையும், பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தும் விதத்தில் பிரபல திரைப்பட பின்ணணி பாடகி அனுராதா ஸ்ரீராம் பாடியுள்ள சிடி வெளியீட்டு விழாவும், அப்பாடலுக்கான நடன நிகழ்ச்சியும் நடக்கிறது. அத்துடன் தென்னக கலைப்பண்பாட்டு துறை சார்பில் ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், பல்வேறு கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவினையொட்டி வஉசி., துறைமுக கடற்கரை மைதானத்தில் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திபொருட்களின் விற்பனை கண்காட்சியும், சிற்றுண்டி விற்பனை அரங்கங்களும் அமைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


  தினமலர்

0 comments:

Post a Comment

 
-