Monday, 12 March 2012

தூத்துக்குடியில் மாரத்தான் போட்டி 25-ந் தேதி நடக்கிறது



தூத்துக்குடி, மார்ச்.11-

தூத்துக்குடியில் வருகிற 25-ந் தேதி மினிமாரத்தான் போட்டி நடைபெறுகிறது.

மாரத்தான் போட்டி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனமும், தூத்துக்குடி மாவட்ட தடகள சங்கமும் இணைந்து மினி மாரத்தான் போட்டிகளை வருகிற 25-ந் தேதி காலை 7 மணிக்கு தூத்துக்குடியில் நடத்துகிறது. போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆண், பெண் வீரர்கள் கலந்து கொள்ளலாம். போட்டிகள் 4 பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது.

ஆண்களுக்கான பிரிவில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 21 கிலோ மீட்டர் தூரமும், பெண்களுக்கு 17 கிலோ மீட்டர் தூரமும் போட்டிகள் நடத்தப்படும். இந்த போட்டியில் முதல் இடம் பிடிக்கும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.7,500-ம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும், மேலும் 10 பேருக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.500-ம் வழங்கப்பட உள்ளது.

மூத்தோர் ஆண்கள்-பெண்கள்

இதேபோல் 18 வயதுக்கு கீழ் உள்ள மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட உள்ளது. மாணவர்களுக்கு 15 கிலோமீட்டர் தூரமும், பெண்களுக்கு 12 கிலோ மீட்டர் தூரமும் போட்டிகள் நடத்தப்படும். இதில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும், ஆறுதல் பரிசாக 10 பேருக்கு ரூ.500-ம் வழங்கப்பட உள்ளது.

இதேபோல் 14 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள், சிறுமிகளுக்கும் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. சிறுவர்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், சிறுமிகளுக்கு 8 கிலோ மீட்டர் தூரமும் போட்டிகள் நடத்தப்படும். இதில் முதல் இடம் பெறுபவர்களுக்கு ரூ.4 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரமும், ஆறுதல் பரிசாக 10 பேருக்கு ரூ.500 பரிசாக வழங்கப்படுகிறது.

மேலும் மூத்தோர் ஆண்கள், பெண்கள் பிரிவில் 35 வயதுக்கு மேல் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் ஆண்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், பெண்களுக்கு 8 கிலோ மீட்டர் தூரமும் போட்டிகள் நடக்கிறது. இதில் முதல் இடம் பெறுபவர்களுக்கு ரூ.3 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.1000-ம், ஆறுதல் பரிசாக 10 பேருக்கு ரூ.500 பரிசாக வழங்கப்படுகிறது.

பதிவு செய்யலாம்

இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயர், வயது, இருப்பிட சான்று நகல்களை செயலாளர், தூத்துக்குடி மாவட்ட தடகள சங்கம், மாவட்ட விளையாட்டு அரங்கம் (தருவை மைதானம்), தூத்துக்குடி. (தொலைபேசி எண்-0461-2321149) என்ற முகவரியிலும் அல்லது ராஜேஷ், மக்கள் தொடர்பு அலுவலர், ஸ்டெர்லைட் நிறுவனம், மதுரை பைபாஸ் ரோடு, தூத்துக்குடி. (தொலைபேசி-0461-4242926) என்ற முகவரிக்கு அனுப்பி வருகிற 20-ந் தேதி மாலை 6 மணிக்கு முன்னர் பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

0 comments:

Post a Comment

 
-