Tuesday, 28 February 2012

மாவட்ட வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டம் 26ம் தேதி மாரத்தான் போட்டியுடன் துவக்கம்



தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழா ஆண்டு கொண்டாட்டம் வரும் 26ம் தேதி நடைபெறும் மாரத்தான் போட்டிகளுடன் தொடங்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம் உதயமாகி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு நடப்பாண்டினை வெள்ளிவிழா ஆண்டாக கொண்டாடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஆஷிஷ்குமார் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், வெள்ளி விழா ஆண்டினை குறிப்பிடும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து சிறப்பு அடையாளச் சின்னம், வெள்ளிவிழா ஆண்டினை குறிப்பிடும் சிறப்பு சொற்றொடர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட சிறப்பினை குறிப்பிடும் வகையிலான சிறப்பு பாடல் ஆகியவற்றை வடிவமைத்து வரும் 15ம் தேதிக்குள் கலெக்டர் ஆபிஸ் அல்லது மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், சிறப்பு அடையாளச் சின்னம், சிறப்பு சொற்றொடர் மற்றும் சிறப்பு பாடல் ஆகியவற்றிக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று கலெக்டர் குறிப்பிட்டார்.


பிப்ரவரி 26ம் தேதி நடைபெறும் மாரத்தான் ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் 14 வயது, 18 வயது மற்றும் 35 வயதிற்கு மேற்பட்டோர் ஆகிய பிரிவின் கீழ் தனித்தனியாக போட்டிகள் நடைபெறும். இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயரினை வரும் 20ம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு தபால் மூலமாகவோ அல்லது 0461-2321149 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ தெரிவிக்கலாம் என்றார். இந்த கூட்டத்தில் திட்ட இயக்குநர் அருண்மணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் தாசன், மாவட்ட கல்வி அதிகாரி ருக்மணி, நேர்முக உதவியாளர் இந்துபாலா, திருச்செந்தூர் ஆர்டிஓ.,பொற்கொடி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கங்காதரன், தேசிய தகவல் மைய மேலாளர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment

 
-