Tuesday 27 March 2012

தூத்துக்குடி மாவட்டம் வெள்ளி விழா ஆண்டு 10 ஏக்கர் பரப்பில் தாவரவியல் பூங்கா திருச்செந்தூரில் உயரமான முருகன் சிலை அமைக்க முடிவு




தூத்துக்குடி, மார்ச்.27-

தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழாவையொட்டி 10 ஏக்கர் பரப்பில் தாவரவியல் பூங்காவும், திருச்செந்தூரில் உயரமான முருகன் சிலை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் நேற்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வெள்ளிவிழா ஆண்டு

நெல்லை மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதையொட்டி, இந்த ஆண்டு முழுவதும் வெள்ளி விழா ஆண்டாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

மாவட்டத்தில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில் கோவில்பட்டியில் ஆக்கி மைதானம் அமைப்பது, திருச்செந்தூரில் சிறிய மைதானம் அமைப்பது, தருவை மைதானத்தில் உள் விளையாட்டு அரங்கம், டென்னிஸ் போட்டிக்கு சிந்தடிக் மைதானம் அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தாவரவியல் பூங்கா

கோரம்பள்ளம் பகுதியில் 10 ஏக்கர் பரப்பில் தாவரவியல் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் பல்வேறு விதமான தாவரங்கள் வைக்கப்பட உள்ளது. தருவைகுளம், திருச்செந்தூர் பகுதியில் கடற்கரை பூங்கா அமைக்கப்பட உள்ளது. கோவில்பட்டியில் ஒரு பூங்காவும், கதிரேசன் மலையில் பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நீர் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மணப்பாடு பகுதியில் பாரா கிளைடர் சாகச பயிற்சி அளிக்கவும், பொதுமக்கள் கிளைடரில் பறக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

மேலும் சிங்கப்பூரில் உள்ள முருகன் சிலையை விட உயரமான ஒரு முருகன் சிலையை திருச்செந்தூரில் நிறுவ திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு சிற்பியை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

சமூகபாதுகாப்பு திட்டத்தின் கீழ் 24 பேருக்கு ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 250 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், தாட்கோ மூலம் 10 பேருக்கு ரூ.42 லட்சத்து 78 ஆயிரத்து 371 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், பணியில் இருந்த போது இறந்த ஒருவரின் குடும்பத்துக்கு உதவித்தொகையாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ஆக மொத்தம் 45 பேருக்கு ரூ.46 லட்சத்து 18 ஆயிரத்து 771 நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆஷிஷ்குமார் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.அமிர்தஜோதி, சிறப்பு திட்டங்கள் செயலாக்க தனித்துணை ஆட்சியர் கமலா ஆகியோர் உடன் இருந்தனர்.

0 comments:

Post a Comment

 
-